Friday, April 01, 2005

வல்லவர் யார்?

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது.

"நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?" என்று எறும்பிடம் கேட்டது.


பட உதவி: கவிதா (9 வயது)

எறும்பு "பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே" என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.

"அப்படியென்ன முக்கியமான கடமை?" என்று பூரான் கேட்டது.

எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் "மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது" என்று கூறிச் சென்று விட்டது.

பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. "எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்" என்று கேட்டது.

அதற்கு எறும்பு "வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்" என்று பணிவாகக் கேட்டது.

பூரான் "தப்பித்து ஓடப் பார்க்காதே!" என்று கேலி செய்தது.

அதற்கு எறும்பு மிக அமைதியுடன் "பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம்" என்று திரும்பவும் கூறியது.
பூரானோ "அப்படி என்ன சாகசத்தை நீ கிழித்து விடப் போகிறாய். சாதூரியமாகப் பேசக் கற்று வைத்திருக்கிறாய்" என்று கூறியது.

எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.

பூரானைப் பார்த்து "உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?" என்று கேட்டது.

பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.

அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

3 comments:

வசந்தன்(Vasanthan) said...

அட! இண்டைக்குத் தான் இந்தப் பக்கத்தப் பாத்தனான். நல்லாயிருக்கு. நன்றி.
தொடர்ந்து எழுதுங்கோ.

ந. உதயகுமார் said...

நன்றி வசந்தன்!

Anonymous said...

Really a Nice & interesting Blog.
I read some stories daily & narrate to my 3yr as bed time stories.

Mr.UdayKumar Keep Up the good job going

-Sundar.