ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.
அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.
ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது ( Downturn :o) ). பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.
பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா !
பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.
பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.
சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.
பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.
பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும் ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.
இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.
ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.
சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.
ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.
பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பினாள்.
அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப் படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.
சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.
திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.
பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் "திருடனுக்குத் தேள் கொட்டியது போல" ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.
No comments:
Post a Comment