Sunday, June 19, 2005

விருப்பப் பட்டியல்

(மூலம்: ஹிந்து யங் வர்ல்ட்)

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான்.

"உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான்.

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்"

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

3 comments:

Anonymous said...

Superb stories

Anonymous said...

உங்கள் கதை எனக்குப் பிடிக்கவில்லை

Anonymous said...

Your storieis are so bad even I could wirte one better than them